Friday, 7 September 2012


புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

எங்களின் தாய்மொழி
இனிய தமிழ்
இழப்புகளின் தாய்மொழி
இது மோமதியின் வரிகள் .சற்று ஆழ்ந்து படித்து பார்த்தோம் என்றால் இரு வேற்றுமையான கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார். தமிழ் மொழியை இனிய மொழியென்றும் முன்பு இழப்புகளின் மொழி என்றும் ஒரு முரண்பாட்டை முன் நிறுத்தி இருப்பதாக தோன்றும். ஆனால் இது முரண்பாடு அல்ல. முடிவு தெரியாத போராட்;டத்தின் தெறிப்பில் புலம்பெயர்வின் வலியால் வந்த வார்த்தை(வாழ்க்கை) இங்கு கவிதையாக உயிர் பெற்று இருக்கின்றது.
இன்று உலக நாடுகளில் 59 நாடுகளில் தமிழ்மொழி பேசப்பட்டு வருகின்றது. அதே வேளையில் இன்று உலக மொழிகளின் தரவரிசையில் 5ம் தரத்தில் தமிழ்மொழி உள்ளது. என்பது நமக்கு பெருமை தரக்கூடிய விடையமாக இருந்தாலும் ஜ.நா. வின் யுனெஸ்கோ நிறுவனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று அறிவித்திருந்;த போதிலும் நடுவண்ணரசு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு தொண்மையான மொழி என்று அறிவித்து இருப்பது சிறுமைப் படுத்தும் விடையாகவே உள்ளது.
விலங்குகளும் பறவைகளும் பாதுகாக்கப்பட்டு வரும் சமயத்தில் ஆறறிவு படைத்த மனித வாழ்க்கை மட்டும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றுவரை உலகளாவிய ரீதியில் 27 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகவும் 13 மில்லியன் மக்கள் சொந்த நாடுகளில் அகதிகளாகவும் உள்ளனர். 1983க்கு முன்னர் சுமார் 2 இலட்சம் பேர் இந்தியாவில் இலங்கை நாட்டவர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.

மனித வாழ்வின் இன்றைய நிலைப்பாட்டை பதிவு செய்துஇருக்கிறார் ‘இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்’ மூலம் கவிஞர் அருணா சுந்தரராசன்.

தோட்டத்திலிருந்து
வீடு திரும்பியிருந்தன
கால்நடைகள்
இரை உலா முடித்து
கூடு திரும்பியிருந்தன பறவைகள்
பள்ளிக்கூடம் சென்றிருந்த
அக்கா மட்டும்
வீடு திரும்பவேயில்லை.

எல்லாமே வீடு திரும்பியிருந்தன அக்கவைத் தவிர. இந்த உறவுகளின் தவிப்பு இன்று நேற்று அல்ல கடந்த இருபத்தைந்து(25) வருடங்களாக எத்தனை உறவுகளை இழந்தோம்? எங்கு வாழ்க்கையைத் தொலைத்தோம்? தெரியவில்லை. அக்கா வீடு திரும்ப வில்லை என்றால் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. விடுதலை போராட்டத்தில் தன்னையும் சக போராளியாக இணைத்து இருக்கலாம். பரவாயில்லை ஆனால் அவளை கடத்தியும் இருக்கலாம், கற்பழித்தும் இருக்கலாம், கொலைகூட செய்து இருக்கலாம்.

இது தினந்தோறும் நடக்கும் விடையமாக மாறிவிட்டது. மனித உரிமைகளை மீட்டு எடுக்கின்ற ‘மனித உரிமை கழகம்’ உலக நாடுகளுக்கான ஜ.நா. சபை போன்ற நடுநிலை அமைப்புகள் சர்வேதேச அழுத்தங்கள் கொடுத்த போதிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இதற்கு எல்லாம் முடிவு என்ன? என்ற கேள்விக்கு கவிஞர் இவ்வாறாக பதிவு செய்து இருக்கிறார்.

காடுகளின்
வரலாறு என்பது மாறி
வரலாறுகள் காடுகளில்
பதிவு செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.

இதே அழுத்தத்தோடும் உணர்வுகளின் வெளிப்பாடாக கவிஞர் சு,சிவா அவர்களின் ஆழ்மனதில்; இருந்து வெடித்து சிதறிய துளிகள் இப்படியாக கண்ணீரும் இரத்தமும்

என் கவிதைகள்
கண்ணீரில்
முத்துக்கோர்க்கும்; முயற்சியல்ல
கண்ணீரை
இரத்தமாக்கும் முயற்சி

கவிதை என்பது அழகியல் மட்டும் அல்ல காதலின் வெளிப்பாடுகளில் வரும் மாயத் தோற்;றமும் அல்ல மனித வாழ்வின் உணர்வின் வெளிப்பாடு உயிரின் ஓசை வாழ்வின் வலியே கவிதை அப்படிப்பட்ட கவிதையே கவிதை.